Friday, March 8, 2013

சொல்வதற்கு சங்கடமாயிருக்கிறது!!செல்போனும் பர்சும் 
ஜீன்சுக்குள் அடங்கிப் போக 
பறவையின் இரட்டை சிறகாய் 
கைவீசி நடக்கிறார்கள் ஆண்கள் 
அழகு சாதனங்களோ 
அத்தியாவசியங்களோ
குடிகொண்ட கைப்பைகள் 
இன்னமும் இறங்க்குவதாயில்லை 
பெண்களின் தோள்களை விட்டு!
வெட்டவெளியென்றும் பாராமல் 
நிகழ்த்தப்பட்ட திமிரின் 
அலட்சியமாய்  
கடற்கரையெங்கும் கிடக்கின்றன
வீசியெறியப்பட்ட ஆணுறைகள்.
தவிர்க்க முடியா 
மாதவிலக்கு 
நாப்கின்களோ  
ரகசியமாய் வாங்கப்படுகின்றன. 
பயன்பாட்டிற்குப் பின் 
அதை விட ரகசியமாய் 
ஒழிக்கப்ப்டுகின்றன      

"அலுவலக சுற்றுலாக்களில் 
எங்கு வேண்டுமானாலும் 
நிறுத்திப் 'போகிறார்கள்'
ஆண்கள்
பாத்ரூம் இருக்கும்
இடாமாய் பார்த்து வண்டியை 
நிறுத்தச் சொல்" 
என்று சொல்வதற்குகூட
அதீத தைரியமுடைய 
ஒருத்தி தேவைப்படுகிறாள் பெண்களுக்கு!

தெருக்களும் 
தெருவோர டீக்கடைகளும் 
இன்னமும் ஆண்களுக்கானதாவே இருக்கிறது!

வேலைக்கு போகாமல் 
வீட்டைப் பார்த்துக் கொள்கிற  
பெண்தான் வேண்டுமென   
ஆண்கள் கேட்கவே செய்கிறார்கள்.  
சுயசார்பையும் 
கொஞ்சம் சுதந்திரத்தையும் 
கொடுத்த வேலையை 
திருமணத்தோடு துறக்க
சம்மதிக்கவே செய்கிறார்கள்  பெண்கள்.

'வீட்ல சும்மாதான் இருக்கேன்'
ஹவுஸ்ஒய்ப் போன்ற 
வார்த்தைகளின் 
அவமானங்களை 
'ஹோம்மேக்கர்' 
என்ற கவுரவ அடைமொழியால் 
துடைத்து விட்டு 
பெண்களையே 
வீட்டின் நிரந்தர பணியாளராக்குகிறது 
சமூகம்!

சமையலறை புகுந்த 
ஆண்களின் எண்ணிக்கை 
இன்னமும் சொற்பமாகவே 
இருக்கிறது.
அந்த வகையில் 
சமூகத்தை சமைக்கிற 
எழுத்தாளர்களிலேயே 
இன்னமும் 
ஒருவர்தான் அறியப்பட்டிருக்கிறார்.

திருமண உரையாடல்களில் 
பெண்களின் கோரிக்கை
"சமையலின் ருசி பற்றி 
ஒருவார்த்தையாவது 
சொல்லவேண்டும்" என்பதிலிருந்து 
"ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது
சமையலில் ஒத்தாசை" 
என்கிற அளவுக்குத்தான் 
பரிணமித்துள்ளது.

வலுமிக்க வீராங்கனையின்  உடலா 
நளினம் மிக்க நடிகையின் உடலா
எதுவேண்டும் என்று பெண்களிடம் 
தேர்தல் வைத்தால் 
வலிமைக்கு டெபாசிட் காலியாவது உறுதி!

பெண்மையின் அழகென்று 
வர்ணிக்கப்பட்டிருப்பதும் 
வர்ணனைகள் வழியே
நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் 
பெண்ணுடலை 
பலஹீனப்படுத்துவதாகவே 
இருப்பதின் பின்னால் 
ஆணாதிக்கத்தின் ரகசிய அரசியல் 
ஏதேனும் உள்ளதாவென்று
எத்தனை பெண்கள் சந்தேகித்திருப்பார்கள்?

எல்லா போர்களிலும் 
உண்மை கொல்லப்படுகிறதென்றால் ,
பெண்மையே  குதறப்படுகிறது!

பெண்களை சிதைக்கிற 
பாலியல் பலாத்காரங்களும் 
திராவக வீச்சுகளும் 
தினமும் அரங்கேறும் தேசத்தில் 
திரையரங்குகளில் 
"இந்த பொண்ணுங்களே 
இப்படித்தான்" டைப் வசனங்களுக்கு 
ஆண்கள் ஆரவாரம் செய்கிறார்கள்
பெண்கள் மௌனம் காக்கிறார்கள்!

மற்றபடி 

வண்ண வண்ண 
ஸ்கூட்டர்களுக்கு 
கும்பிடு போட்டுவிட்டு 
கியர் பைக்குகளில் 
சீறும் பெண்களுக்கும்

போட்டு வைத்த 
கோடுகளுக்குள் அடைபடாமல்,
புத்தகங்களை சிறகாக்கி 
வாசிப்பில் 
புதிய வானம் தேடும்பெண்களுக்கும் 

அச்சம் மடம் நாணம் 
பூசி அலங்கரித்து
மென்குரலே பெண்குரலென்று 
பேசித்திரியாமல் 
சத்தமாய் பேசி 
சத்தமாய் சிரிக்கின்ற 
பெண்களுக்கும் 

சார்ந்து வாழ மறுத்து
பகிர்ந்து வாழ விரும்பும் 
பெண்களுக்கும்,

அழகில் அடையாளம் தேடாமல்
சுயத்தை முன்வைக்கும் 
பெண்களுக்கும் 

மகளிர்தின வாழ்த்துக்கள்! 

Monday, January 7, 2013

கணினித்தமிழுக்கு
கைகள் வாழ்க்கைப்பட்டு  போனதால்,
வார்த்தைகளுக்கு இடையே மேல்நோக்கிய அம்புக்குறியிட்டு,
விடுபட்ட வார்த்தைகளை
இரு வரிகளுக்கும் இடையில்
நுணுக்கி எழுத,
அடுத்த டைரிக்குறிப்பு வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது!
மௌனத்தின் ஆழத்தில்
ஆவேசமாய் அலைகின்றன வார்த்தைகள்,
வாய் கட்டப்பட்ட
பாலிதீன் பையினுள்
நீந்துகின்ற மீன்களை போல...!

Thursday, April 19, 2012

கிராமத்து பெற்றோர்களின்
ஆடி ஆவணிகளை
ஆகஸ்டு செப்டம்பர்களாக்குகிறது
பிள்ளைகளின்
மாதச்சம்பள வாழ்க்கை!

Monday, August 8, 2011

பயம்

விபத்துச் செய்திகளில்
மரணித்தவர்களின் வயது
என்னுடையதாகவே இருக்கிறது,
என் ஒவ்வொரு வயதிலும்!

Sunday, June 19, 2011

கனவில் வந்த நண்பன்
கவிதையொன்றைச் சொன்னான்.
காகிதத்தில் எழுதிவிட்டேன்,
யார் பெயரைப் போட?

Friday, May 14, 2010

தடைபட்ட மின்சாரம்

தடைபட்ட மின்சாரம்
தருவித்த அமைதியை,
எடுத்துரைக்க வந்துவிடுகிறது
எப்போதும் ஒரு காகம்!தனிமையின் சுதந்திரத்தில்,
காதலை கொண்டாடும்,
காதலியின்
இலக்கனமில்லா
மெல்லிய நடனத்தை,
ஒளிந்திருந்து ரசிக்கும்,
காதலனாக்கியது என்னை,
மின்விசிறி இல்லா
அறையில் மிதக்கும் ,
ஊதுபத்தி புகை!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8638:2010-05-18-09-51-12&catid=2:poems&Itemid=265

Monday, March 1, 2010

கீழே சீறிப்பரபரக்கும் சாலை
மேலே உ(நி)றைந்த புன்னகையாய் நிலா
நடுவிலே நான்.

Tuesday, February 16, 2010

மெதுமெதுவாய் உரசி
ஏதோ ஒருகனத்தில்
குப்பென்று தீப்பற்ற
வாசித்து முடித்த புத்தகத்தை
நண்பனுக்கு பரிந்துரைத்தேன்.
"ஒரு மணி நேரத்தில
படிச்சிடலாம் மச்சி!"
"பின்ன ஏன்டா உனக்கு
ஒருவாரம் ஆச்சு?"
"எந்த ஒருமணிநேரமின்னு
கண்டுபுடிக்கனுமில்ல...!"

Thursday, November 5, 2009

ஈரத்துணிகளை
வீட்டிற்குள் விரட்டிவிட்டு
கொடிக்கம்பியில்
மழைத்துளிகளை
காயப்போட்டுச் செல்கிறது
கார்மேகம்.
இரவுரயில்.
பொளர்னமி பார்க்க
வசதியில்லாத,
எதிர்பக்க இருக்கை.
ஏமாற்றத்தில்
தூங்கிப் போனேன்.
அதிகாலையில்
என்னை
வேடிக்கை பார்த்தபடி
நின்றது நிலா
என் ஜன்னலில்!

Tuesday, September 1, 2009

எல்லை தாண்டி என் வீட்டிற்குள்
நுழையும் செடியின் கிளை.
பக்கத்து வீட்டில்
வெட்டச் சொல்லி விட்டேன்.
இன்று அது பூத்திருந்தது!

நேற்று சிரித்தவை

அலுவலகத்தில் புதிதாய்
சேர்ந்த இளையவர்கள்
அற்ப விஷயமொன்றிற்கு
குதூகலித்து சிரித்த போது,
மெல்லிய புன்னகையோடு
அவர்களை
வேடிக்கை பார்த்த நிமிடம்
மீண்டும் உணர்த்தியது
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை!

http://www.keetru.com/literature/poems/venamaniselvan.php

Wednesday, June 3, 2009

கடைவிரித்து காத்திருக்கிறான்
கிளிஜோசியக்காரன்.
எப்போது நீளும் முதல் கை?
.

Friday, May 15, 2009

பூனைக்கு பயந்து........

குழந்தை கையிலிருந்த
கத்தியை பிடுங்கி
உயரமான இடத்தில்
வைத்த மாமியார்
மருமகளின் பொறுப்பின்மையை
கடிந்து கொண்டார்.
கொட்டிக் கிடந்த
குப்பையைக் கண்டதும்
இன்னும் கோபமாகி
முனுமுனுத்தவாறே
கூட்டித்தள்ளினார்.
எல்லாம் முடித்ததும்
குழந்தையை தூக்கி
மடியில் வைத்துக் கொன்டு
டீவியை போட்டுவிட்டாள்.

Wednesday, February 25, 2009

பெஞ்ச் ப்ராஜெக்ட்

மரத்தின் வளர்ச்சிக்கே
உழைத்திருந்தாலும்,
தண்ணீருக்கு பஞ்சம் என்பதால்
உயிர்த்திருத்தலின் பொருட்டு,
இலைகளை உதிர்த்து,
வெறும் கிளைகளுடன்
நிற்கிறது
இலையுதிர்கால மரம்.
.
.
.
நான் இலையா? கிளையா?


தொலைத்தவர்கள்
கனிப்பொறியில்
அமிழ்ந்திருந்தேன்.
"வெளியே வாங்க மாமா,
விளையாடலாம்!" என்றாள்
இரண்டு வயது மருமகள்!

யாரை அழைத்திருப்பாள்?
என்னையா?
எனக்குள் இருந்திருந்த
மழலையையா?

Tuesday, February 24, 2009

இலையுதிர்கால
மரத்தடி இரவு.
கிளைகளில் நட்சத்திரங்கள்!

Thursday, November 13, 2008

தானியங்கி கதவு
மூடிக் கொள்ளவிருந்த
கடை......சி விநாடியில்
ஓடிச் சென்று
தடுத்து விட்ட
அலுவலகத் தோழியின்
வெற்றிப் புன்னகையில்
எட்டிப் பார்த்தது
கற்பிதங்கள்
அறியாத மழலையொன்று!.

Sunday, July 13, 2008

பதறியோடுகிறது பூனை!
அதற்கெப்படித் தெரியும்
இன்றெனக்கு தூக்கம் வராத விஷயம்!


அலுவலகத்திலிருந்து சீக்கிரமாய்
வீடு திரும்ப நினைத்த நாளில்
பெய்கிறது மழை!

Wednesday, April 2, 2008

அதிகாலையின் முதற்பறவை
விட்டெறிந்து சென்றது,
அன்றைய தினத்திற்க்கான
முதற்கூவலை,
செய்தித்தாளை விட்டெறியும்
சைக்கிள் பையனின்
அலட்சியத்துடனும்,
என்னை
விழித்துக் கொள்ளச் செய்வதற்கான
யத்தனிப்புடனும்..........!

Monday, March 17, 2008

இயலாதோர்

வயிற்றையோ மனதையோ,
சோற்றாலோ போதையாலோ
நிறைத்துவிட்டு
வருகிற நிமிடங்களில்
நீள்கிற கைகளுக்கு
இடப்படும்
ஒரு ரூபாய்,
ரத்தமோ,
உதவியோ கேட்டு வருகிற
இமெயில்களை வெறுமனே
இலவசமாய்
பார்வர்டு செய்தல்,
நடந்த
நடக்கிற
விபத்துகளை
எட்டி நின்று
பார்க்கிற வேளைகளில்,
நம் இரக்க சுபாவத்தை
பிறறிய வெளிப்படுத்துகிற
ஒரு "உச்....!"
இவையெல்லாம்
சேர்த்து குழைத்து
எனக்கும் தெரியுமாக்கும்
என்றுநீட்டி முழக்கிக் கொள்ளும்
சில கவிதைகள்,
போன்ற
ஆகப் புனிதமான கடமைகளை
ஆற்றுவதிலேயெ
ஆத்ம திருப்தி
அடைந்துவிடுகிறது,
களத்திலிறங்காமல்,
தள்ளியே நிற்கும்,
நம்
சகமனிதர் குறித்த
நம் சமூக அக்கறை!

Sunday, March 16, 2008

தேடிச் சோறு நிதந்தின்று........

உணவு உறைவிடம்
ஒரு துணை
என பிழைத்திருத்தலின்
தேவைகளே
உங்களின் லட்சியமாகுமென்றால்....................,
கனவு, லட்சியம்,
வாழ்க்கை
என்பதின்பொருளையாவது
அறிவீர்களா நீங்கள்?

Wednesday, January 23, 2008

தலைமுறை தவறுகள்!

சமமாய் மதிக்கவேண்டிய ஒன்றை
சகதியாக்கி மிதித்தனர்
என் முன்னோர்.
புலியாகிச் சீறி,
இன்று
கரையுடைத்து
காட்டாறெனெப்
பாய்கிறது அது,
முளை விடும்
குருத்துக்கும்,
முற்றிய முள்மரத்துக்கும்
வித்தியாசம் பார்க்காமல்.

அமுதத்திற்க்கும்
ஆலகால விஷத்திற்க்கும்
வேற்றுமை பாராட்டாமல்
வெடித்து நிற்கிறது அது
வெட்டி எறிவேன்
என் கற்பப்பையை என.

எடுத்துச் சொல்ல
ஏதும் இல்லை.
அல்லது
இயலவில்லை.

"பிள்ளை பெறுவதும்
அதைப் பேனிக் காப்ப்தற்கும்
வேறு வழி
பார்த்துக் கொள்,
இல்லையேல்
விட்டுவிடு!
புலம்பாதே,
அது என்னால் மட்டுமே
செய்ய முடிந்த
ஆகச்சிறந்த
புனிதமென!
புனிதமென்றும்,
புண்ணாக்காக்கென்றும் பேசி
எங்களைப்
பூட்டிவைத்தது போதுமென்று"
அறைகூவி
நிற்கிறது
புயலாய்!

தீட்டென்றும்
பெட்டையென்றும்
திமிராய் பேசித்
திராவகம் வீசித்
திரிந்திருக்கின்றனர்
எங்களின்
அப்பன்களும் பாட்டன்களும்!

பெற்றோர் செய்த பாவம்
பிள்ளைக்களுக்கென,
ஆண்டான்டு காலமாய்
அடக்கி வைத்து
ஆரியக் கூத்தாடிய
அப்பன்களுக்கெல்லாம்
சேர்த்து,
அனுபவிக்கப் போகிறார்கள்
எங்களின் பிள்ளைகள்,
தாய்பாலில்லா
உணவையும்,
தாய்ப்பாசம் இல்லா
வாழ்கையையும்!

தடுத்தாட்கொள்ள
வழியின்றி,
முன்னோரின்
தவறுக்கும் சேர்த்து
தலைகவிழ்ந்து
நிற்கிறது,
காலதாமதமாய்
கண்விழித்த
கூட்டமொன்று,
தலை கவிழ்வும்
நாடகமென
தவறாய்
புரிந்து கொள்ளப்படுமோவென்ற
அச்சத்தில்!

Monday, January 21, 2008

மின்னல் துளிகள்

திருஷ்டிப் பொட்டும்
அழகாகிப் போனது,
குழந்தையின் கன்னத்தில்!

Monday, January 7, 2008

நான் இரவு மற்றும் நாவல்

இலக்கியம் தின்ற இரவுகளில்
இன்னுமொன்று.
இன்னும் விழித்திராத சூரியனை
எனக்குள் மட்டும்
ஜொலிக்கச் செய்திருந்தது
வாசித்து முடித்த நாவல்.
தூங்கித் தொலைக்காமல்
வாழ்ந்து சேர்த்த
எத்தனையாவது இரவு இதுவென்று
கணக்குப் பார்த்துக் கொண்டேன்.
நான் வாழ்ந்த வாழ்கிற
வாழப் போகிற
வாழ மறந்த வாழ்கையின்
சகல நாற்றங்களையும் மலர்களையும்
கண்ணீரையும் கனவுகளையும்
பார்த்து முடித்துவிட்டு
என்னோடு பகிர்ந்தும் போயிருந்த
நாவல் கதாபாத்திரங்கள்
மங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரஙளோடு
அடிவானில் உலாத்தினார்கள்.
உலகத்தில் இந்த வினாடியில்
கற்பழிக்கப்பட்பவர்கள் இத்தனை,
கொல்லப்படுபவர்கள் இத்தனையென்று
கணக்கெடுத்து சொல்லும் எவனாவது
ஒருவன், இந்த நிமிடத்தில்
என்னைப் போலவே
இலக்கியம் வாசித்து
விழித்திருப்பவனை(ளை)
கண்டுபிடித்து சொன்னால்,
இரவை இன்னும் கொஞ்சம் நீட்டித்து,
உரையாடிக் கொண்டிருக்கலாமென்று
நினைத்துக் கொண்டென்!
உறங்கும் தென்னைமரங்களைத்
தட்டியெழுப்பி,
விழித்தே கழித்த இரவேதும் உண்டா
உம் இடம்நகரா
வாழ்க்கைப் பயனத்தில்
என்று கேட்டுவைத்தேன்.
உறங்கும் மனிதர்கள்
விழித்துவிடக் கூடாதேயென்ற பயத்தில்
ஒவ்வொரு கடவுகளாய்
ஒலிபெருக்கியில்
சத்தமாய் பாடத்தொடங்க,
நானோ அவர்களைப் பார்த்து
அலட்சியமாய் சிரித்துவிட்டு,
முதற்பறவையின் சிறகிசைக்காய்
காத்திருக்கத் தொடங்கினேன்!
-பொ.வெண்மணிச் செல்வன்
http://semmalar.in/index.php?year=2009&month=6&pageid=1

Friday, January 4, 2008

புலம்பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்,
அப்பாவின் அறிவுறையுடனும்,
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது!

கல்லூரி படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்களோடு பேச்சிலர் வாழ்கையும்,
படிப்பிற்கேற்றவேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக்கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்!

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ,
கல்லூரியில் கடிதத்திலும்,
பிறகு தொலைபேசியிலும்,
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அனில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று
வேடிக்கை பார்ப்பது கூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பொளர்னமியையும்,
கட்டிடங்களுக்கு
பின்னால் மறைகிற
சூரியனையும்,
அபார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக் கொன்டே கிடக்கிறது மனசு!

ஊருக்கு போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்கு செல்கையில்,
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும்போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்!

தலை கீழாயிறங்கி
தரை தொட்டு வேரூன்றி
தாய்மரத்தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்,
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொன்டிருப்பதை
சுயபரிதாபம் சுட்டிக் காட்டும்!

பார்த்துக் கொன்ட வேலையும்,
பழகிப்போன பிழைப்பும்,
நகரத்தோடு பினைத்துப் போட,
இழந்துவிட்ட சொர்கமாகவே
இருக்கிறது கிராமம்!

இனியென்ன......!
எல்லோரையும் போல,
நகரத்தின்மையத்திலோ ஓரத்திலோ,
இல்லை கொஞ்சம் தூரத்திலோ,
ஒரு வீடு வாங்கி,
ஆலமரத்தை
வேறோடு பெயர்த்து,
வேறிடத்தில் நடுவதுபோல,
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப் போகும்.
மனிதர்கள்தானே......!
பழகிப் போகும்!
என்ன........!
எனக்கு வாய்த்த
வேப்ப மரத்தடிப் பள்ளியும்,
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்,
மயில்கள் திரியும் வேலிக்காடும்,
களத்து மேட்டு
காவல் ராத்திரிகளும்,
அங்கு கேட்டுக் கிடந்த,
காதல்,கற்பனை,பேய்க் கதைகளும்,
ஊருனிக்கரை புளியம்பழங்களும்,
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல் போகும்!
http://www.keetru.com/literature/poems/venmani_selvan1.php
பொ.வெண்மணிச்செல்வன்

Thursday, January 3, 2008

புத்தாண்டு (கேள்வி) வாழ்த்து!

நீ வளர்கிறாய் என்றுவாழ்த்துச் சொன்ன
புத்தாண்டுகள் போய்,
உனக்கு வயதாகிறதுஎன்று
கொஞ்சமாய்வருத்தப்பட வைக்கும்
புத்தாண்டுகள்வரத்தொடங்கி விட்டன!

வயதாவதும் வளர்ச்சிதான்
என்ற புரிதலைத் தவிர்த்து
வருடங்களுக்கு
டை அடிக்கும்பழக்கம்தான் தொடர்கிறது!

வருத்தம் கூடவயதாவதில் இல்லை,
நூற்றாண்டு காலங்களாய்
வந்து, தின்று,இருந்துசெத்துப் போகிற
வேடிக்கை மனிதர்களை போல,
வேலை தேடிப் பிடித்து,
வேளா வேளைக்கும்
சோறு தின்பதைத் தவிரவேறு
என்ன கிழித்து விட்டோம்
இந்த கால் நூற்றாண்டுக்கும்
மேலான வழ்கையில் என்பதில்தான்!

மிச்சமிருக்கிற வாழ்க்கையிலாவது
நிச்சயமாய்
ஏதாவதுநிகழ்த்தியே ஆகவேண்டும்!
இல்லையெனில்,
ஒவ்வொரு புத்தாண்டும்,
வாழ்த்துக்களுக்குப் பதில்
கேள்விக் குறிகளோடுதான் வரும்.

Monday, October 22, 2007

சே குவேரா


எதிரில் நடக்கும் அநீதிகண்டு

மனம் கொதித்த போதும்,

ஏதும் செய்யாமல்

அமைதியாய் வந்து விடுகிறேன்.

பிறகெப்படி ஆவது

உன் நண்பனாய்?களத்தில் இறங்கும் கோபத்தில்

கனன்று நின்றபோது,

வாழ்க்கை என்னவென்று

புரியவில்லை உனக்கென்றார்கள்.

தவறுகள் நடப்பது கண்டும்

எதிர்க்குரல் எழுப்பாமல்

தலை குனிந்து

திரும்பிய போது,

புத்தி வந்தது

பிழைத்துக் கொள்வாய் என்றார்கள்.

பிறப்பெடுத்து வந்தது

வெறுமனே

பிழைத்துக் கொள்ளத்தானா?அநீக்கெதிரான

எங்களின் கோபங்கள்

இழப்புகள் குறித்த

தயக்கங்களாலேயே

வீரியம் குறைக்கப்படுகின்றன!ஆனாலும்

பத்திரமாய் பதுக்கி

வைத்திருக்கிறோம்

உன் கோபத்தை!

அதை கையிலெடுக்கும் நாளை

எதிரிகள் தீர்மானிப்பார்கள்.

அன்று பிழைக்காமல் போனாலும்,

உன் நன்பனான பெருமிதம்

நிச்சயம் மிச்சமிருக்கும்.

-வெண்மணிச் செல்வன்

-http://www.vaarppu.com/padam_varikal.php?id=4

மனிதர்கள்-கடவுள்கள்-குப்பை

வீட்டருகே குப்பை கொட்டினார்கள்.
கெட்ட வார்த்தைகளில் திட்டினார்,
அப்போதும் கொட்டினார்கள்!
தெருவில் இறங்கி
சன்டையிட்டுப் பார்த்தார்,
நிறுத்துவதாயில்லை.
"பைத்தியங்கள் இங்கே
குப்பை கொட்டட்டும்!"
என்று எழுதி வைத்தார்,
ஒத்துக் கொண்டது போல்
கொட்டி வைத்தார்கள்!
சுவர் முழுதும் கடவுள்களை
வரைந்து வைத்தார்.
யாரும் குப்பை கொட்டுவதில்லை!
தந்திரம் தெரிந்தவர்களுக்கு
கடவுள் ஒரு கருவி!

- வெண்மணிச் செல்வன் (vennuhere@gmail.com)
http://www.keetru.com/literature/poems/venmani_selvan.php

Thursday, August 23, 2007

பக்தி

வீடு திருப்ம்பும் அவசரம்
நெரிசலான போக்குவரத்து
எரிச்சலூட்டும் மழை
சாலை வரி கட்டாத சாமி
உரிமையாய் சாலை மறித்து
ஊர்வலம் போகிறார்.
காத்திருந்தாக வேண்டியகட்டாயத்தில்
ஒற்றைக் காலூன்றிநிற்கும்
மோட்டார்பைக்காரர்
எதுவும் செய்ய இயலாத எரிச்சலில்
கடுகடுத்த முகத்தோடு
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்!

Tuesday, July 10, 2007

கனவு கண்டே
களைத்துப் போகிறேன்.
கனவு மூட்டைகளை
சுமந்து திரிகிறேன்,
முதுகு கூனும் வரை.
கனவுகள் ஒவ்வொன்றும்
சிறகாகி
காற்றிலேறிப் பறப்பதும்
கனவாகவே கனக்கிறது.

Saturday, July 7, 2007

குட்டி கவிதைகள்!


நான் வைத்த மரம்,
கூடு கட்டும் காகம்.
"அனுமதி கேட்டாயா?" என்றேன்.
அலட்சியமாய் எசசமிட்டது,
ஏழெட்டு விதைகள்!!


நான்(ம்)!

வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியில்
சிகரெட் புகைததபடி
தெருவில் நடக்கிறேன்.
திறந்து கிடக்கும்
பாதாள சாக்கடையிலிருந்து
கழுத்தை நீட்டும் மனிதன்
வாளி நிறைய கழிவை
வெளியே கொட்டிவிட்டு
மீண்டும் உள்ளே மறைகிறான்.
சாக்கடை என் மீது பட்டுவிடாமல்
எச்சரிக்கையாய் விலகி புகைபிடித்தபடி
தொடர்ந்து நடக்கிறேன் நான்.


நேற்றைக்கும் இன்றுக்கும்
எந்த வித்தியாசத்தையும்
உன்னால் உணர முடியவில்லை என்றால்,
நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை,
செத்துக் கொண்டிருக்கிறாய்!