Monday, October 22, 2007

சே குவேரா


எதிரில் நடக்கும் அநீதிகண்டு

மனம் கொதித்த போதும்,

ஏதும் செய்யாமல்

அமைதியாய் வந்து விடுகிறேன்.

பிறகெப்படி ஆவது

உன் நண்பனாய்?



களத்தில் இறங்கும் கோபத்தில்

கனன்று நின்றபோது,

வாழ்க்கை என்னவென்று

புரியவில்லை உனக்கென்றார்கள்.

தவறுகள் நடப்பது கண்டும்

எதிர்க்குரல் எழுப்பாமல்

தலை குனிந்து

திரும்பிய போது,

புத்தி வந்தது

பிழைத்துக் கொள்வாய் என்றார்கள்.

பிறப்பெடுத்து வந்தது

வெறுமனே

பிழைத்துக் கொள்ளத்தானா?



அநீக்கெதிரான

எங்களின் கோபங்கள்

இழப்புகள் குறித்த

தயக்கங்களாலேயே

வீரியம் குறைக்கப்படுகின்றன!



ஆனாலும்

பத்திரமாய் பதுக்கி

வைத்திருக்கிறோம்

உன் கோபத்தை!

அதை கையிலெடுக்கும் நாளை

எதிரிகள் தீர்மானிப்பார்கள்.

அன்று பிழைக்காமல் போனாலும்,

உன் நன்பனான பெருமிதம்

நிச்சயம் மிச்சமிருக்கும்.

-வெண்மணிச் செல்வன்

-http://www.vaarppu.com/padam_varikal.php?id=4

மனிதர்கள்-கடவுள்கள்-குப்பை





வீட்டருகே குப்பை கொட்டினார்கள்.
கெட்ட வார்த்தைகளில் திட்டினார்,
அப்போதும் கொட்டினார்கள்!
தெருவில் இறங்கி
சன்டையிட்டுப் பார்த்தார்,
நிறுத்துவதாயில்லை.
"பைத்தியங்கள் இங்கே
குப்பை கொட்டட்டும்!"
என்று எழுதி வைத்தார்,
ஒத்துக் கொண்டது போல்
கொட்டி வைத்தார்கள்!
சுவர் முழுதும் கடவுள்களை
வரைந்து வைத்தார்.
யாரும் குப்பை கொட்டுவதில்லை!
தந்திரம் தெரிந்தவர்களுக்கு
கடவுள் ஒரு கருவி!

- வெண்மணிச் செல்வன் (vennuhere@gmail.com)
http://www.keetru.com/literature/poems/venmani_selvan.php

Thursday, August 23, 2007

பக்தி

வீடு திருப்ம்பும் அவசரம்
நெரிசலான போக்குவரத்து
எரிச்சலூட்டும் மழை
சாலை வரி கட்டாத சாமி
உரிமையாய் சாலை மறித்து
ஊர்வலம் போகிறார்.
காத்திருந்தாக வேண்டியகட்டாயத்தில்
ஒற்றைக் காலூன்றிநிற்கும்
மோட்டார்பைக்காரர்
எதுவும் செய்ய இயலாத எரிச்சலில்
கடுகடுத்த முகத்தோடு
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்!

Tuesday, July 10, 2007

கனவு கண்டே
களைத்துப் போகிறேன்.
கனவு மூட்டைகளை
சுமந்து திரிகிறேன்,
முதுகு கூனும் வரை.
கனவுகள் ஒவ்வொன்றும்
சிறகாகி
காற்றிலேறிப் பறப்பதும்
கனவாகவே கனக்கிறது.

Saturday, July 7, 2007

குட்டி கவிதைகள்!


நான் வைத்த மரம்,
கூடு கட்டும் காகம்.
"அனுமதி கேட்டாயா?" என்றேன்.
அலட்சியமாய் எசசமிட்டது,
ஏழெட்டு விதைகள்!!


நான்(ம்)!

வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியில்
சிகரெட் புகைததபடி
தெருவில் நடக்கிறேன்.
திறந்து கிடக்கும்
பாதாள சாக்கடையிலிருந்து
கழுத்தை நீட்டும் மனிதன்
வாளி நிறைய கழிவை
வெளியே கொட்டிவிட்டு
மீண்டும் உள்ளே மறைகிறான்.
சாக்கடை என் மீது பட்டுவிடாமல்
எச்சரிக்கையாய் விலகி புகைபிடித்தபடி
தொடர்ந்து நடக்கிறேன் நான்.


நேற்றைக்கும் இன்றுக்கும்
எந்த வித்தியாசத்தையும்
உன்னால் உணர முடியவில்லை என்றால்,
நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை,
செத்துக் கொண்டிருக்கிறாய்!