Tuesday, July 10, 2007

கனவு கண்டே
களைத்துப் போகிறேன்.
கனவு மூட்டைகளை
சுமந்து திரிகிறேன்,
முதுகு கூனும் வரை.
கனவுகள் ஒவ்வொன்றும்
சிறகாகி
காற்றிலேறிப் பறப்பதும்
கனவாகவே கனக்கிறது.

Saturday, July 7, 2007

குட்டி கவிதைகள்!


நான் வைத்த மரம்,
கூடு கட்டும் காகம்.
"அனுமதி கேட்டாயா?" என்றேன்.
அலட்சியமாய் எசசமிட்டது,
ஏழெட்டு விதைகள்!!


நான்(ம்)!

வயிறு நிறைய சாப்பிட்ட திருப்தியில்
சிகரெட் புகைததபடி
தெருவில் நடக்கிறேன்.
திறந்து கிடக்கும்
பாதாள சாக்கடையிலிருந்து
கழுத்தை நீட்டும் மனிதன்
வாளி நிறைய கழிவை
வெளியே கொட்டிவிட்டு
மீண்டும் உள்ளே மறைகிறான்.
சாக்கடை என் மீது பட்டுவிடாமல்
எச்சரிக்கையாய் விலகி புகைபிடித்தபடி
தொடர்ந்து நடக்கிறேன் நான்.


நேற்றைக்கும் இன்றுக்கும்
எந்த வித்தியாசத்தையும்
உன்னால் உணர முடியவில்லை என்றால்,
நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை,
செத்துக் கொண்டிருக்கிறாய்!