Wednesday, January 23, 2008

தலைமுறை தவறுகள்!

சமமாய் மதிக்கவேண்டிய ஒன்றை
சகதியாக்கி மிதித்தனர்
என் முன்னோர்.
புலியாகிச் சீறி,
இன்று
கரையுடைத்து
காட்டாறெனெப்
பாய்கிறது அது,
முளை விடும்
குருத்துக்கும்,
முற்றிய முள்மரத்துக்கும்
வித்தியாசம் பார்க்காமல்.

அமுதத்திற்க்கும்
ஆலகால விஷத்திற்க்கும்
வேற்றுமை பாராட்டாமல்
வெடித்து நிற்கிறது அது
வெட்டி எறிவேன்
என் கற்பப்பையை என.

எடுத்துச் சொல்ல
ஏதும் இல்லை.
அல்லது
இயலவில்லை.

"பிள்ளை பெறுவதும்
அதைப் பேனிக் காப்ப்தற்கும்
வேறு வழி
பார்த்துக் கொள்,
இல்லையேல்
விட்டுவிடு!
புலம்பாதே,
அது என்னால் மட்டுமே
செய்ய முடிந்த
ஆகச்சிறந்த
புனிதமென!
புனிதமென்றும்,
புண்ணாக்காக்கென்றும் பேசி
எங்களைப்
பூட்டிவைத்தது போதுமென்று"
அறைகூவி
நிற்கிறது
புயலாய்!

தீட்டென்றும்
பெட்டையென்றும்
திமிராய் பேசித்
திராவகம் வீசித்
திரிந்திருக்கின்றனர்
எங்களின்
அப்பன்களும் பாட்டன்களும்!

பெற்றோர் செய்த பாவம்
பிள்ளைக்களுக்கென,
ஆண்டான்டு காலமாய்
அடக்கி வைத்து
ஆரியக் கூத்தாடிய
அப்பன்களுக்கெல்லாம்
சேர்த்து,
அனுபவிக்கப் போகிறார்கள்
எங்களின் பிள்ளைகள்,
தாய்பாலில்லா
உணவையும்,
தாய்ப்பாசம் இல்லா
வாழ்கையையும்!

தடுத்தாட்கொள்ள
வழியின்றி,
முன்னோரின்
தவறுக்கும் சேர்த்து
தலைகவிழ்ந்து
நிற்கிறது,
காலதாமதமாய்
கண்விழித்த
கூட்டமொன்று,
தலை கவிழ்வும்
நாடகமென
தவறாய்
புரிந்து கொள்ளப்படுமோவென்ற
அச்சத்தில்!

Monday, January 21, 2008

மின்னல் துளிகள்

திருஷ்டிப் பொட்டும்
அழகாகிப் போனது,
குழந்தையின் கன்னத்தில்!

Monday, January 7, 2008

நான் இரவு மற்றும் நாவல்

இலக்கியம் தின்ற இரவுகளில்
இன்னுமொன்று.
இன்னும் விழித்திராத சூரியனை
எனக்குள் மட்டும்
ஜொலிக்கச் செய்திருந்தது
வாசித்து முடித்த நாவல்.
தூங்கித் தொலைக்காமல்
வாழ்ந்து சேர்த்த
எத்தனையாவது இரவு இதுவென்று
கணக்குப் பார்த்துக் கொண்டேன்.
நான் வாழ்ந்த வாழ்கிற
வாழப் போகிற
வாழ மறந்த வாழ்கையின்
சகல நாற்றங்களையும் மலர்களையும்
கண்ணீரையும் கனவுகளையும்
பார்த்து முடித்துவிட்டு
என்னோடு பகிர்ந்தும் போயிருந்த
நாவல் கதாபாத்திரங்கள்
மங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரஙளோடு
அடிவானில் உலாத்தினார்கள்.
உலகத்தில் இந்த வினாடியில்
கற்பழிக்கப்பட்பவர்கள் இத்தனை,
கொல்லப்படுபவர்கள் இத்தனையென்று
கணக்கெடுத்து சொல்லும் எவனாவது
ஒருவன், இந்த நிமிடத்தில்
என்னைப் போலவே
இலக்கியம் வாசித்து
விழித்திருப்பவனை(ளை)
கண்டுபிடித்து சொன்னால்,
இரவை இன்னும் கொஞ்சம் நீட்டித்து,
உரையாடிக் கொண்டிருக்கலாமென்று
நினைத்துக் கொண்டென்!
உறங்கும் தென்னைமரங்களைத்
தட்டியெழுப்பி,
விழித்தே கழித்த இரவேதும் உண்டா
உம் இடம்நகரா
வாழ்க்கைப் பயனத்தில்
என்று கேட்டுவைத்தேன்.
உறங்கும் மனிதர்கள்
விழித்துவிடக் கூடாதேயென்ற பயத்தில்
ஒவ்வொரு கடவுகளாய்
ஒலிபெருக்கியில்
சத்தமாய் பாடத்தொடங்க,
நானோ அவர்களைப் பார்த்து
அலட்சியமாய் சிரித்துவிட்டு,
முதற்பறவையின் சிறகிசைக்காய்
காத்திருக்கத் தொடங்கினேன்!
-பொ.வெண்மணிச் செல்வன்
http://semmalar.in/index.php?year=2009&month=6&pageid=1

Friday, January 4, 2008

புலம்பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்,
அப்பாவின் அறிவுறையுடனும்,
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது!

கல்லூரி படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்களோடு பேச்சிலர் வாழ்கையும்,
படிப்பிற்கேற்றவேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக்கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்!

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ,
கல்லூரியில் கடிதத்திலும்,
பிறகு தொலைபேசியிலும்,
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அனில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று
வேடிக்கை பார்ப்பது கூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பொளர்னமியையும்,
கட்டிடங்களுக்கு
பின்னால் மறைகிற
சூரியனையும்,
அபார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக் கொன்டே கிடக்கிறது மனசு!

ஊருக்கு போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்கு செல்கையில்,
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும்போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்!

தலை கீழாயிறங்கி
தரை தொட்டு வேரூன்றி
தாய்மரத்தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்,
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொன்டிருப்பதை
சுயபரிதாபம் சுட்டிக் காட்டும்!

பார்த்துக் கொன்ட வேலையும்,
பழகிப்போன பிழைப்பும்,
நகரத்தோடு பினைத்துப் போட,
இழந்துவிட்ட சொர்கமாகவே
இருக்கிறது கிராமம்!

இனியென்ன......!
எல்லோரையும் போல,
நகரத்தின்மையத்திலோ ஓரத்திலோ,
இல்லை கொஞ்சம் தூரத்திலோ,
ஒரு வீடு வாங்கி,
ஆலமரத்தை
வேறோடு பெயர்த்து,
வேறிடத்தில் நடுவதுபோல,
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்க்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப் போகும்.
மனிதர்கள்தானே......!
பழகிப் போகும்!
என்ன........!
எனக்கு வாய்த்த
வேப்ப மரத்தடிப் பள்ளியும்,
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்,
மயில்கள் திரியும் வேலிக்காடும்,
களத்து மேட்டு
காவல் ராத்திரிகளும்,
அங்கு கேட்டுக் கிடந்த,
காதல்,கற்பனை,பேய்க் கதைகளும்,
ஊருனிக்கரை புளியம்பழங்களும்,
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல் போகும்!
http://www.keetru.com/literature/poems/venmani_selvan1.php
பொ.வெண்மணிச்செல்வன்

Thursday, January 3, 2008

புத்தாண்டு (கேள்வி) வாழ்த்து!

நீ வளர்கிறாய் என்றுவாழ்த்துச் சொன்ன
புத்தாண்டுகள் போய்,
உனக்கு வயதாகிறதுஎன்று
கொஞ்சமாய்வருத்தப்பட வைக்கும்
புத்தாண்டுகள்வரத்தொடங்கி விட்டன!

வயதாவதும் வளர்ச்சிதான்
என்ற புரிதலைத் தவிர்த்து
வருடங்களுக்கு
டை அடிக்கும்பழக்கம்தான் தொடர்கிறது!

வருத்தம் கூடவயதாவதில் இல்லை,
நூற்றாண்டு காலங்களாய்
வந்து, தின்று,இருந்துசெத்துப் போகிற
வேடிக்கை மனிதர்களை போல,
வேலை தேடிப் பிடித்து,
வேளா வேளைக்கும்
சோறு தின்பதைத் தவிரவேறு
என்ன கிழித்து விட்டோம்
இந்த கால் நூற்றாண்டுக்கும்
மேலான வழ்கையில் என்பதில்தான்!

மிச்சமிருக்கிற வாழ்க்கையிலாவது
நிச்சயமாய்
ஏதாவதுநிகழ்த்தியே ஆகவேண்டும்!
இல்லையெனில்,
ஒவ்வொரு புத்தாண்டும்,
வாழ்த்துக்களுக்குப் பதில்
கேள்விக் குறிகளோடுதான் வரும்.