Wednesday, January 23, 2008

தலைமுறை தவறுகள்!

சமமாய் மதிக்கவேண்டிய ஒன்றை
சகதியாக்கி மிதித்தனர்
என் முன்னோர்.
புலியாகிச் சீறி,
இன்று
கரையுடைத்து
காட்டாறெனெப்
பாய்கிறது அது,
முளை விடும்
குருத்துக்கும்,
முற்றிய முள்மரத்துக்கும்
வித்தியாசம் பார்க்காமல்.

அமுதத்திற்க்கும்
ஆலகால விஷத்திற்க்கும்
வேற்றுமை பாராட்டாமல்
வெடித்து நிற்கிறது அது
வெட்டி எறிவேன்
என் கற்பப்பையை என.

எடுத்துச் சொல்ல
ஏதும் இல்லை.
அல்லது
இயலவில்லை.

"பிள்ளை பெறுவதும்
அதைப் பேனிக் காப்ப்தற்கும்
வேறு வழி
பார்த்துக் கொள்,
இல்லையேல்
விட்டுவிடு!
புலம்பாதே,
அது என்னால் மட்டுமே
செய்ய முடிந்த
ஆகச்சிறந்த
புனிதமென!
புனிதமென்றும்,
புண்ணாக்காக்கென்றும் பேசி
எங்களைப்
பூட்டிவைத்தது போதுமென்று"
அறைகூவி
நிற்கிறது
புயலாய்!

தீட்டென்றும்
பெட்டையென்றும்
திமிராய் பேசித்
திராவகம் வீசித்
திரிந்திருக்கின்றனர்
எங்களின்
அப்பன்களும் பாட்டன்களும்!

பெற்றோர் செய்த பாவம்
பிள்ளைக்களுக்கென,
ஆண்டான்டு காலமாய்
அடக்கி வைத்து
ஆரியக் கூத்தாடிய
அப்பன்களுக்கெல்லாம்
சேர்த்து,
அனுபவிக்கப் போகிறார்கள்
எங்களின் பிள்ளைகள்,
தாய்பாலில்லா
உணவையும்,
தாய்ப்பாசம் இல்லா
வாழ்கையையும்!

தடுத்தாட்கொள்ள
வழியின்றி,
முன்னோரின்
தவறுக்கும் சேர்த்து
தலைகவிழ்ந்து
நிற்கிறது,
காலதாமதமாய்
கண்விழித்த
கூட்டமொன்று,
தலை கவிழ்வும்
நாடகமென
தவறாய்
புரிந்து கொள்ளப்படுமோவென்ற
அச்சத்தில்!