Friday, March 8, 2013

சொல்வதற்கு சங்கடமாயிருக்கிறது!!



செல்போனும் பர்சும் 
ஜீன்சுக்குள் அடங்கிப் போக 
பறவையின் இரட்டை சிறகாய் 
கைவீசி நடக்கிறார்கள் ஆண்கள் 
அழகு சாதனங்களோ 
அத்தியாவசியங்களோ
குடிகொண்ட கைப்பைகள் 
இன்னமும் இறங்க்குவதாயில்லை 
பெண்களின் தோள்களை விட்டு!
வெட்டவெளியென்றும் பாராமல் 
நிகழ்த்தப்பட்ட திமிரின் 
அலட்சியமாய்  
கடற்கரையெங்கும் கிடக்கின்றன
வீசியெறியப்பட்ட ஆணுறைகள்.
தவிர்க்க முடியா 
மாதவிலக்கு 
நாப்கின்களோ  
ரகசியமாய் வாங்கப்படுகின்றன. 
பயன்பாட்டிற்குப் பின் 
அதை விட ரகசியமாய் 
ஒழிக்கப்ப்டுகின்றன      

"அலுவலக சுற்றுலாக்களில் 
எங்கு வேண்டுமானாலும் 
நிறுத்திப் 'போகிறார்கள்'
ஆண்கள்
பாத்ரூம் இருக்கும்
இடாமாய் பார்த்து வண்டியை 
நிறுத்தச் சொல்" 
என்று சொல்வதற்குகூட
அதீத தைரியமுடைய 
ஒருத்தி தேவைப்படுகிறாள் பெண்களுக்கு!

தெருக்களும் 
தெருவோர டீக்கடைகளும் 
இன்னமும் ஆண்களுக்கானதாவே இருக்கிறது!

வேலைக்கு போகாமல் 
வீட்டைப் பார்த்துக் கொள்கிற  
பெண்தான் வேண்டுமென   
ஆண்கள் கேட்கவே செய்கிறார்கள்.  
சுயசார்பையும் 
கொஞ்சம் சுதந்திரத்தையும் 
கொடுத்த வேலையை 
திருமணத்தோடு துறக்க
சம்மதிக்கவே செய்கிறார்கள்  பெண்கள்.

'வீட்ல சும்மாதான் இருக்கேன்'
ஹவுஸ்ஒய்ப் போன்ற 
வார்த்தைகளின் 
அவமானங்களை 
'ஹோம்மேக்கர்' 
என்ற கவுரவ அடைமொழியால் 
துடைத்து விட்டு 
பெண்களையே 
வீட்டின் நிரந்தர பணியாளராக்குகிறது 
சமூகம்!

சமையலறை புகுந்த 
ஆண்களின் எண்ணிக்கை 
இன்னமும் சொற்பமாகவே 
இருக்கிறது.
அந்த வகையில் 
சமூகத்தை சமைக்கிற 
எழுத்தாளர்களிலேயே 
இன்னமும் 
ஒருவர்தான் அறியப்பட்டிருக்கிறார்.

திருமண உரையாடல்களில் 
பெண்களின் கோரிக்கை
"சமையலின் ருசி பற்றி 
ஒருவார்த்தையாவது 
சொல்லவேண்டும்" என்பதிலிருந்து 
"ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது
சமையலில் ஒத்தாசை" 
என்கிற அளவுக்குத்தான் 
பரிணமித்துள்ளது.

வலுமிக்க வீராங்கனையின்  உடலா 
நளினம் மிக்க நடிகையின் உடலா
எதுவேண்டும் என்று பெண்களிடம் 
தேர்தல் வைத்தால் 
வலிமைக்கு டெபாசிட் காலியாவது உறுதி!

பெண்மையின் அழகென்று 
வர்ணிக்கப்பட்டிருப்பதும் 
வர்ணனைகள் வழியே
நிர்ணயிக்கப்பட்டிருப்பதும் 
பெண்ணுடலை 
பலஹீனப்படுத்துவதாகவே 
இருப்பதின் பின்னால் 
ஆணாதிக்கத்தின் ரகசிய அரசியல் 
ஏதேனும் உள்ளதாவென்று
எத்தனை பெண்கள் சந்தேகித்திருப்பார்கள்?

எல்லா போர்களிலும் 
உண்மை கொல்லப்படுகிறதென்றால் ,
பெண்மையே  குதறப்படுகிறது!

பெண்களை சிதைக்கிற 
பாலியல் பலாத்காரங்களும் 
திராவக வீச்சுகளும் 
தினமும் அரங்கேறும் தேசத்தில் 
திரையரங்குகளில் 
"இந்த பொண்ணுங்களே 
இப்படித்தான்" டைப் வசனங்களுக்கு 
ஆண்கள் ஆரவாரம் செய்கிறார்கள்
பெண்கள் மௌனம் காக்கிறார்கள்!

மற்றபடி 

வண்ண வண்ண 
ஸ்கூட்டர்களுக்கு 
கும்பிடு போட்டுவிட்டு 
கியர் பைக்குகளில் 
சீறும் பெண்களுக்கும்

போட்டு வைத்த 
கோடுகளுக்குள் அடைபடாமல்,
புத்தகங்களை சிறகாக்கி 
வாசிப்பில் 
புதிய வானம் தேடும்பெண்களுக்கும் 

அச்சம் மடம் நாணம் 
பூசி அலங்கரித்து
மென்குரலே பெண்குரலென்று 
பேசித்திரியாமல் 
சத்தமாய் பேசி 
சத்தமாய் சிரிக்கின்ற 
பெண்களுக்கும் 

சார்ந்து வாழ மறுத்து
பகிர்ந்து வாழ விரும்பும் 
பெண்களுக்கும்,

அழகில் அடையாளம் தேடாமல்
சுயத்தை முன்வைக்கும் 
பெண்களுக்கும் 

மகளிர்தின வாழ்த்துக்கள்! 

Monday, January 7, 2013

கணினித்தமிழுக்கு
கைகள் வாழ்க்கைப்பட்டு  போனதால்,
வார்த்தைகளுக்கு இடையே மேல்நோக்கிய அம்புக்குறியிட்டு,
விடுபட்ட வார்த்தைகளை
இரு வரிகளுக்கும் இடையில்
நுணுக்கி எழுத,
அடுத்த டைரிக்குறிப்பு வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது!
மௌனத்தின் ஆழத்தில்
ஆவேசமாய் அலைகின்றன வார்த்தைகள்,
வாய் கட்டப்பட்ட
பாலிதீன் பையினுள்
நீந்துகின்ற மீன்களை போல...!