Monday, January 7, 2008

நான் இரவு மற்றும் நாவல்

இலக்கியம் தின்ற இரவுகளில்
இன்னுமொன்று.
இன்னும் விழித்திராத சூரியனை
எனக்குள் மட்டும்
ஜொலிக்கச் செய்திருந்தது
வாசித்து முடித்த நாவல்.
தூங்கித் தொலைக்காமல்
வாழ்ந்து சேர்த்த
எத்தனையாவது இரவு இதுவென்று
கணக்குப் பார்த்துக் கொண்டேன்.
நான் வாழ்ந்த வாழ்கிற
வாழப் போகிற
வாழ மறந்த வாழ்கையின்
சகல நாற்றங்களையும் மலர்களையும்
கண்ணீரையும் கனவுகளையும்
பார்த்து முடித்துவிட்டு
என்னோடு பகிர்ந்தும் போயிருந்த
நாவல் கதாபாத்திரங்கள்
மங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரஙளோடு
அடிவானில் உலாத்தினார்கள்.
உலகத்தில் இந்த வினாடியில்
கற்பழிக்கப்பட்பவர்கள் இத்தனை,
கொல்லப்படுபவர்கள் இத்தனையென்று
கணக்கெடுத்து சொல்லும் எவனாவது
ஒருவன், இந்த நிமிடத்தில்
என்னைப் போலவே
இலக்கியம் வாசித்து
விழித்திருப்பவனை(ளை)
கண்டுபிடித்து சொன்னால்,
இரவை இன்னும் கொஞ்சம் நீட்டித்து,
உரையாடிக் கொண்டிருக்கலாமென்று
நினைத்துக் கொண்டென்!
உறங்கும் தென்னைமரங்களைத்
தட்டியெழுப்பி,
விழித்தே கழித்த இரவேதும் உண்டா
உம் இடம்நகரா
வாழ்க்கைப் பயனத்தில்
என்று கேட்டுவைத்தேன்.
உறங்கும் மனிதர்கள்
விழித்துவிடக் கூடாதேயென்ற பயத்தில்
ஒவ்வொரு கடவுகளாய்
ஒலிபெருக்கியில்
சத்தமாய் பாடத்தொடங்க,
நானோ அவர்களைப் பார்த்து
அலட்சியமாய் சிரித்துவிட்டு,
முதற்பறவையின் சிறகிசைக்காய்
காத்திருக்கத் தொடங்கினேன்!
-பொ.வெண்மணிச் செல்வன்
http://semmalar.in/index.php?year=2009&month=6&pageid=1