Thursday, November 5, 2009

ஈரத்துணிகளை
வீட்டிற்குள் விரட்டிவிட்டு
கொடிக்கம்பியில்
மழைத்துளிகளை
காயப்போட்டுச் செல்கிறது
கார்மேகம்.




இரவுரயில்.
பொளர்னமி பார்க்க
வசதியில்லாத,
எதிர்பக்க இருக்கை.
ஏமாற்றத்தில்
தூங்கிப் போனேன்.
அதிகாலையில்
என்னை
வேடிக்கை பார்த்தபடி
நின்றது நிலா
என் ஜன்னலில்!

Tuesday, September 1, 2009

எல்லை தாண்டி என் வீட்டிற்குள்
நுழையும் செடியின் கிளை.
பக்கத்து வீட்டில்
வெட்டச் சொல்லி விட்டேன்.
இன்று அது பூத்திருந்தது!

நேற்று சிரித்தவை

அலுவலகத்தில் புதிதாய்
சேர்ந்த இளையவர்கள்
அற்ப விஷயமொன்றிற்கு
குதூகலித்து சிரித்த போது,
மெல்லிய புன்னகையோடு
அவர்களை
வேடிக்கை பார்த்த நிமிடம்
மீண்டும் உணர்த்தியது
எனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை!

http://www.keetru.com/literature/poems/venamaniselvan.php

Wednesday, June 3, 2009

கடைவிரித்து காத்திருக்கிறான்
கிளிஜோசியக்காரன்.
எப்போது நீளும் முதல் கை?
.

Friday, May 15, 2009

பூனைக்கு பயந்து........

குழந்தை கையிலிருந்த
கத்தியை பிடுங்கி
உயரமான இடத்தில்
வைத்த மாமியார்
மருமகளின் பொறுப்பின்மையை
கடிந்து கொண்டார்.
கொட்டிக் கிடந்த
குப்பையைக் கண்டதும்
இன்னும் கோபமாகி
முனுமுனுத்தவாறே
கூட்டித்தள்ளினார்.
எல்லாம் முடித்ததும்
குழந்தையை தூக்கி
மடியில் வைத்துக் கொன்டு
டீவியை போட்டுவிட்டாள்.

Wednesday, February 25, 2009

பெஞ்ச் ப்ராஜெக்ட்

மரத்தின் வளர்ச்சிக்கே
உழைத்திருந்தாலும்,
தண்ணீருக்கு பஞ்சம் என்பதால்
உயிர்த்திருத்தலின் பொருட்டு,
இலைகளை உதிர்த்து,
வெறும் கிளைகளுடன்
நிற்கிறது
இலையுதிர்கால மரம்.
.
.
.
நான் இலையா? கிளையா?


தொலைத்தவர்கள்
கனிப்பொறியில்
அமிழ்ந்திருந்தேன்.
"வெளியே வாங்க மாமா,
விளையாடலாம்!" என்றாள்
இரண்டு வயது மருமகள்!

யாரை அழைத்திருப்பாள்?
என்னையா?
எனக்குள் இருந்திருந்த
மழலையையா?

Tuesday, February 24, 2009

இலையுதிர்கால
மரத்தடி இரவு.
கிளைகளில் நட்சத்திரங்கள்!